அவர் அப்படித்தான் : எஸ். ராமகிருஷ்ணன்

நன்றி: உயிர்மை
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=347
சென்ற வருடத்தில் ஒரு முறை இடிந்தகரை என்ற கடற்கரை கிராமத்திற்கு நண்பரின் திருமண நிகழ்விற்காகச் சென்றிருந்தேன். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதியது. சுனாமியால் பாதிக்கப்பட்ட கடற்கரை என்றார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு அந்த ஊருக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னேன். உடனே என் நண்பர் இங்கே யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று கேட்டார்.
நான் சிரித்தபடியே வண்ணநிலவன் கதையொன்றில் இந்த ஊரைச் சேர்ந்த பெண் ஒருத்தி இடம்பெற்றிருக்கிறாள். அவரது கதைஉலகம் இதுபோன்ற கடற்கரை கிராமங்களின் மனிதர்களைப் பற்றியது. அந்தப் பெண்ணைப் பற்றி வாசித்த உந்துதலில் அவரது கதையுலகில் இடம்பெற்ற நிலப்பரப்பைக் காண அலைந்திருக்கிறேன். இந்தப் பகுதியில் உள்ள உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை பெருமணல், கூட்டப்புளி என்று சுற்றியிருக்கிறேன். இப்போதும் குரும்பூர் என்ற பெயரைக் கேட்டதும் எனக்கு எஸ்தர் கதையில் பாட்டியின் சவப்பெட்டியை வாங்கி ஈசாக் சென்ற ஊர் என்று தான் நினைவில் இருக்கிறது என்றேன். அவருக்கு வியப்பாக இருந்தது.
கதைகள்தான் என் நினைவின் சாட்சிகள். ஏதேதோ ஊர்களை, வீதிகளை, நிலப்பரப்பை, பகலிரவை, மனிதர்களை ஞாபகப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன கதைகள். புதுமைப்பித்தன் காட்டிய சென்னையும், ஜி. நாகராஜன் காட்டிய மதுரையும், ஆ.மாதவன் அடையாளப்படுத்திய திருவனந்தபுரமும், கி.ராஜநாராயணன் பதிவு செய்த கரிசல்மண்ணும், ஜானகிராமனின் கதைகளில் ஓடிய காவேரியும் காண் உலகில் ஒரு போதும் கண்டறியமுடியாத விநோத உலகமாக அல்லவா இருக்கிறது. அதே இடங்களைத் தேடிச்சென்று பார்க்கும் போதெல்லாம் கதையில் வருவது போல இல்லையே என்ற ஏக்கம்தான் தோன்றுகிறது.
கதைகள் உலகைப் புரட்டிப் போடுகின்றன. காண்உலகில் நெருங்கிச் செல்ல முடியாத அண்மையை, தனித்துவத்தை, மனித நடமாட்டம் ஓய்ந்த பிறகு அவை கொள்ளும் தன்னியல்பைக் காட்டுகின்றன. ஒவ்வொரு ஊரும் தன்னை எழுதச் சொல்லி ஏதோவொரு எழுத்தாளனைப் பிடித்துக் கொள்கின்றது. அவன் அந்த ஊரின் புராதனத்தை, புதையுண்டு போன நினைவுகளை, வாழ்ந்து மடிந்தவர்களை, வாழ்ந்து கொண்டு அடையாளமில்லாமல் போனவர்களை, புதிதாகப் பிறக்கின்றவர்களை எழுதி எழுதி கை சோர்ந்து போகிறான்.  பிறகு ஊர் இன்னொரு எழுத்தாளனைத் தேர்வு செய்கிறது. இப்படித்தான் தொடர்கிறது இலக்கியப் பயணம் என்று தோன்றுகிறது.
மண்ணும் நீரும் காற்றும் வெயிலும் இருளும் எளிதானவையில்லை. அவை மனித இருப்பின் மீது உக்கிரமாக ஆட்சி செய்யக்கூடியவை. மனிதர்களோடு மொழியில்லாமல் பேசக்கூடியவை. எங்கள் ஊரில் வெயிலோடு பேசுவது இயல்பான ஒன்று. இருட்டு வயதானவர்களுடன் எப்போதும் பேசிக்கொண்டு தானிருக்கிறது. மண் அதைக் கடந்து செல்லும் மனிதர்களின் செவிகள் உணரும் வண்ணம் முணங்குகிறது. மண்ணின் அடியில் புதையுண்டு போன மனிதர்களின் எலும்புகள் தங்களின் வாழ்வை எழுதும்படியாக, நினைவு கொள்ளும்படியாக, அதைக் கடந்து செல்லும் மனிதர்களைக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. அந்தக் குரலுக்கு எவன் செவி சாய்க்கின்றானோ அவனே எழுத்தாளன் ஆகிறான். அவனே கவிஞன் ஆகிறான்.
அந்த வகையில்  நடுத்தரவர்க்க மனிதர்களின்  ஆசைகளை, இயலாமைகளை, கடற்கரை கிராமத்து மனிதர்களின் போராட்டமிக்க வாழ்வை, கடும்பஞ்சத்தை, சொந்த வீட்டில் அந்நியமாகிப் போன குடும்பச் சூழலை, தான் வாழும் காலத்தின் சமூக கலாச்சார மாற்றங்களுக்கான எதிர்குரலைப் பதிவு செய்த பெரும்கலைஞன் என்று வண்ண நிலவனைச் சொல்வேன்.
கடல்புரத்தில், கம்பாநதி, எஸ்தர், பாம்பும் பிடாரனும், ரெயினிஸ் ஐயர் தெரு, தாமிரபரணி கதைகள், மெய்ப்பொருள், காலம் என்று முப்பது ஆண்டுகளில் அவர் எழுதியது மிகக் குறைவு. ஆனால் அவரது படைப்புகளின் வழியாக நாம் கண்டடையும் உலகம் மிகப்பெரியது. எத்தனை மாறுபட்ட கதாபாத்திரங்கள், நுட்பங்கள், மனவெழுச்சிகள்.
வண்ணநிலவன் தன்னுடைய முன்னுரை ஒன்றில் பெர்லாகர் குவிஸ்டின் (Par Lagerkvist) அன்புவழியைப் போல ஒரு நாவலை எழுத முடியுமா என்று ஆதங்கப்பட்டிருப்பார். அப்படி என் இருபது வயதில் வண்ணநிலவனின் எஸ்தர் போல ஒரு கதையை எழுதமுடியுமா என்று ஆதங்கப்பட்டிருக்கிறேன். அது இன்றும் எனக்குள் அப்படியே இருக்கிறது. உலகின் சிறந்த பத்துச் சிறுகதைகளின் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கச் சொன்னால் நிச்சயம் அதில் ஒன்றாக எஸ்தர் கதையைத் தேர்வு செய்வேன். என்னை மிகவும் பாதித்த கதையது.
என் கல்லூரி நாட்களில் வண்ணநிலவனைத் தேடித்தேடிப் படித்தேன். அவரது அகவுலகம் எனக்கு மிகவும் நெருக்கமானது. அவரது கதையின் பல சம்பவங்கள் என் வாழ்வின் ஊடாக நடந்திருக்கின்றன. குரலை உயர்த்தாமல் கதை சொல்லும் பாங்கும், துல்லியமான விவரணைகளும் கச்சிதமான கதை வடிவமும் அவருக்கென்றே அமைந்தவை. மானசீகமாக அவரை ஒரு ஆசானாகக் கொண்டு அவரைப் போலவே கதைகள் எழுத முயன்றிருக்கிறேன். ஆனால் அது எளிதில்லை என்று, எழுதி உணர்ந்திருக்கிறேன். வண்ணநிலவனின் எழுத்து அவரது சுயத்தின் வெளிப்பாடு. அவர் கண்டு உணர்ந்த வாழ்க்கை. அதன் மீதான அவரது விமர்சனம். பல கதைகளில் கோபம் தான் கேலியாக, விரக்தியாக இடம் மாறியிருக்கிறது.
என்னுடைய அம்மா அவரது கதைகளைத் தொடர்ந்து வாசித்திருக்கிறார். ஒருமுறை வண்ணநிலவனின் சிறுகதைகளை வாசித்துவிட்டு வாழ்ந்து கெட்ட குடும்பங்களின் கதையைச் சொல்கிறார், படித்தால் ஏதேதோ நினைவுக்கு வருகிறது என்று சொன்னார். அதுதான் வண்ணநிலவனின் கதைகளின் மையப்புள்ளி.
அவர் கதைகளின் உலகம் வாழ்வின் நெருக்கடி மனிதர்களை எப்படி வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றுகிறது. சொந்த வீட்டிற்குள்ளாகவே எப்போது அந்நியமாக உணர்கிறோம். சின்னஞ்சிறு ஆசைகள்கூட ஏன் பொய்த்துப்போகின்றன, ஆண்களையும் பெண்களையும் இத்தனை முரண்பாடுகள், விலகல்கள், கோபதாபங்களைத் தாண்டி எது ஒன்று சேர்த்து வாழவைக்கின்றது. எந்த நம்பிக்கையின் அச்சில் நாம் சுழன்று கொண்டிருக்கிறோம் என்ற தேடுதலும் அதற்கு அவர் கண்டறிந்த முடிவுகளுமே  கதைகளாகின்றன.
டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவலின் முதல்வரியாக சந்தோஷமான குடும்பங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன. ஆனால் துயரம்படிந்த குடும்பங்கள் ஒவ்வொன்றும் தனக்குரிய வழியில் துன்பப்படுகின்றன என்று எழுதியிருப்பார். அது வண்ணநிலவனின் கதைகளுக்கும் பொருந்தக்கூடியது.
மனிதத் துயரங்களின் மீது அக்கறை கொள்வதும் அதைப் பகிர்ந்து கொள்வதும் மாற்றுத் தளங்களை உருவாக்குவதுமே இலக்கியத்தின் பிரதான வேலை. அதைத்தான் முன்னோடி இலக்கியவாதிகள் யாவரும் செய்திருக்கிறார்கள். அந்த எழுத்து முறை மிக நேரடியானது. வலி நிரம்பியது. வாசிப்பு சுவாரஸ்யம் தருவதற்கு பதிலாக வாசித்து முடித்த பிறகு ஆழ்ந்த மனவேதனையை உருவாக்கக் கூடியது. கண்ணால் பார்த்திராத மனிதர்களின்துக்கத்திற்காக நம்மைத் துவளச் செய்யக்கூடியது.
அப்படி வண்ணநிலவனின் கதைகள் படித்துவிட்டு உச்சிக்குழிவரை ஏறிய வலியோடு  என் கிராமத்தின் புழுதிபடிந்த வெம்பரப்பில் பனைகளுக்குள் நடந்து அலைந்திருக்கிறேன். முறிந்த பனையோலையொன்று மரத்திலிருந்து உதிராமலும் அதே நேரம் தன் பசுமை இழந்தும் காற்றில் சப்தமிட்டுக் கொண்டேயிருப்பது போல வாழ்வின் உள்ளே இருந்தபடியே அதன் உவகை இழந்து வெளிறிப்போன கதாமாந்தர்களுக்கான துக்கமது.
வண்ணநிலவனின் கதை உலகில் பெண்கள் அதிகம். அவர்கள் எளிமையானவர்கள். ஆனால் உறுதியானவர்கள். மனதின் ஆசையை மறைத்துக்கொண்டு கண்ணீரைக் கூடத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்கள். ஆனால் உள்ளார்ந்த அன்பும் சகிப்புத்தனமும் கொண்டவர்கள். எஸ்தர் சித்தியைப் போல ஒருத்தி கிடைக்கமாட்டாளா என்று ஏக்கம் கொள்ளுமளவு அவரது கதாபாத்திரம் நிஜமாக இருக்கும்.
எஸ்தர் கதை எத்தனையோ விதங்களில் முன்னோடியானது. தமிழ்க் கதையுலகில் கிளாரிந்தாவும்  ஞானசௌந்தரியும் சுந்தரிபாயும் காட்டிய கிறிஸ்துவ உலகிலிருந்து முற்றிலும் மாறுபட்டது வண்ணநிலவன் காட்டும் கிறிஸ்துவ குடும்பங்கள். இவர்களில் பலர் மதம் மாறியவர்கள். ஆனால் கிறிஸ்துவிற்குத் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தவர்கள். அடித்தட்டுமக்கள். பிரார்த்தனைகள் மட்டுமே தங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்.
இதற்கு உதாரணமாக எஸ்தர் கதையை எடுத்துக் கொள்ளலாம். முடிவாக பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென ஏற்பாடாகியது என்று துவங்குகிறது கதை. எஸ்தர் சித்தி, சின்ன அமலம், பெரிய அமலம், அகஸ்டின், டேவிட், ஈசாக், பாட்டி  என்ற கதாபாத்திரங்கள். தெற்கே குரும்பூருக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் என்ற அடையாளம் காட்டப்படுகிறது.
பஞ்சம் முற்றிய காலத்தில் இனி ஊரில் பிழைக்கமுடியாது என்று முடிவு செய்துவிட்ட குடும்பம் வயதாகி நடமாட்டம் ஒடுங்கிய பாட்டியை என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடுவதே கதையின் மையம்.
கதையினூடாக அழிந்துகொண்டிருக்கும் சின்னஞ்சிறு ஊரும் அதன் நிசப்தமும். சாவைக்கூட பகிர்ந்துகொள்ள யாருமில்லாமல் போன துக்கமும் ஒரு தீக்குச்சியைக் கூட கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நெருக்கடியும் தண்ணீர் கிடைக்காத தவிப்பும் பின்புலமாக விவரிக்கப்படுகிறது.
ஊரைச் சுற்றி நிரம்புகிறது இருட்டு. அது எஸ்தர் சித்தியிடம், நீயும் உனக்குப் பிரியமானவர்களும்  இங்கிருந்து போவதைத் தவிர வேறே வழியென்ன? மழைக்காகக் காத்திருந்து  மடிவீர்களா என்று கேட்கிறது. இருட்டின் குரலுக்கு எஸ்தர் பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் மனம் தத்தளிக்கிறது.
பாட்டியின் பார்வைமங்கிய கண்களில் எப்போதும் ஈரம் கசிந்து கொண்டிருக்கிறது. எஸ்தர் சித்தி  வீட்டில் எல்லோரும் தூங்கியான பிறகு அடிக்கடி கைவிளக்கைத் தூண்டிக்கொண்டுவந்து பார்க்கிறாள். அந்த வெளிச்சத்தில் பாட்டியின் கண்களில் வழியும் ஈரத்தின் பின்னே அழியாத நம்பிக்கையிருக்கிறது.
வாழ்வின் மீதான பற்று ஒரு பக்கமும் வாழ முடியாத நெருக்கடி மறுபக்கமும் எஸ்தர் சித்தியை ஊசலாடச் செய்கிறது. அவள் உள்ளூர கலக்கம் கொண்டிருக்கிறாள். ஆனால் காட்டிக் கொள்ளவில்லை. பெரிய அமலத்தையும் சின்ன அமலத்தையும்  அவர்கள் பிறந்த வீட்டிற்கு அனுப்புகிறாள். தாங்கள் மதுரைக்குப் போய் கொத்தவேலை செய்து பிழைக்கப் போவதாகச் சொல்கிறாள். ஆனால் பாட்டியை என்ன செய்வது?
கூரையில் நிலைகுத்தி நின்ற பாட்டியின் கண்கள் எதையோ காண்கின்றன. தேவலோகத்திலிருந்து மீட்பர்கள் எவராவது அந்த ஊரைக் காப்பாற்ற வந்துவிடப் போகிறார்களா என்ன?
வேறுவழியின்றி  நள்ளிரவில் குழந்தைகளோடு படுத்துக் கிடந்த எஸ்தர் சித்தி எழுந்து போய் பாட்டியின் அருகாமையில் படுத்துக் கொள்கிறாள்.  மறுநாள் பாட்டி இறந்துவிடுகிறாள். அவளுக்காகக் குரும்பூரில் இருந்து பழைய சவப் பெட்டியை சல்லிசான விலையில் ஈசாக் வாங்கி வருகிறான். அவளை, கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு செல்கிறார்கள்.
ஆனால் யாரும் அழவேயில்லை.  மாறாக அவர்கள் பயந்து போயிருந்ததை அவர்களது கலவரமான முகங்கள் காட்டுகின்றன.  எஸ்தர் சித்திக்கு மட்டும் பாட்டியின் நிலைகுத்திய பார்வை அடிக்கடி  ஞாபகத்துக்கு வந்து கொண்டேயிருந்தது. வெகுகாலம் அந்தக் கண்களை அவள் மறக்காமலிருந்தாள் என்பதில் முடிவடைகிறது.
உண்மையில் எஸ்தர் சித்தி பாட்டியின் இருப்பை முடித்து வைத்திருக்கிறாள். அது கதையில் நேரடியாக வருவதில்லை. ஆனால் அதன் கனம், அழுத்தம் சரியாக வெளிப்பட்டிருக்கிறது. சாவு அவர்களுக்கு ஒரு விடுதலையைத் தருகிறது. பல நேரங்களில் மனித இருப்பு தரும் வலி சாவில் முடிந்து போய்விடுகிறது. பாட்டியின் மௌனம் கதை முழுவதும் கொப்பளிக்கிறது. தன்னை ஒப்புக் கொடுத்துக் கொள்வது எளிதானதில்லை. நமக்குப் பிடித்தமானவர்களை விலக்கிப்போவது அவ்வளவு சுலபமானதில்லை. அது ஒருபோதும் நேரக்கூடாதது. ஆனால் அதுதான் எஸ்தர் சித்தியை வதைக்கிறது.
அவள் ஒரு தீர்க்கதரிசியைப் போல வழிகாட்டுகிறாள். ஒரு மீட்பரை ரட்சிப்பதற்காக எண்ணிக்கையற்ற சிசுக்கள் பலிகொடுக்கப்பட்டதை நினைவுபடுத்துவது போலிருக்கிறது அவளது செயல். ஊரைப் பிரிந்து சென்ற  எஸ்தர் சித்திக்கு அந்தக் கண்கள் நினைவில் இருந்து கொண்டேயிருக்கின்றன. அது அழியாக்கறையாக அவள் மனதில் நிலைகுத்திவிட்டது. அவளால் இனி நிம்மதி கொள்ள முடியாது. இருட்டு அவளை அறிந்திருக்கிறது. அவளது செயலுக்குத் துணை நின்றிருக்கிறது. அதன் பிறகு இருட்டு பேசுவதேயில்லை. உலகின்  மொத்த இருட்டு ஒன்று சேர்ந்து நிரம்பினாலும் அவளால் இனி ஆழ்ந்த உறக்கம் கொள்ள முடியாது.
வாசித்து முடிக்கையில் மனம் ஒரு நிமிஷம் எஸ்தர் சித்திக்காக நடுங்குகிறது. சொல் அற்றுப்போய் அவளைக் கட்டிக்கொள்ளத் துடிக்கிறது. ஒரு கதை வாசகனை என்ன செய்யும் என்ற நூற்றாண்டின் கேள்வி மண்டியிட்டு தன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் தருணம் எஸ்தரை வாசித்து முடிக்கும் ஒவ்வொருவருக்கும் நடந்தேறுகிறது.
கதை முழுவதும் அழிந்த கிராமத்தின் முணுமுணுப்பு கேட்டுக் கொண்டேயிருக்கிறது. உயிர்த்திருத்தல் எவ்வளவு பாடுகள் நிரம்பியது என்பது புரியத் துவங்குகிறது.  அவ்வகையில் எஸ்தர் மிக முக்கியமான கதை. திரைப்படமாக எடுக்கப்பட்டால் அது உலகசினிமாவில் முக்கியமானதாக இடம்பெறும்.
எஸ்தர் மட்டுமில்லை. நவீனத் தமிழ்ச்சிறுகதை உலகினை திசை மாற்றம் செய்த பல முக்கிய கதைகளை எழுதியிருக்கிறார் வண்ணநிலவன். அழைக்கிறவர்கள், பாம்பும் பிடாரனும் அயோத்தி, மிருகம், அவனூர் என்று சொல்லிக் கொண்டே போகலாம். நாவலிலும் கடல்புரத்தில், கம்பாநதி, ரெயினீஸ் ஐயர் தெரு என்று யாவும் முக்கியமான நாவல்களே.
*
கல்லூரி நாட்களிலே வண்ணநிலவனைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேயிருந்தேன். அவர் துக்ளக் அலுவலகத்தில் வேலை செய்கிறார். அவர்தான் துர்வாசர் என்ற பெயரில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார் என ஒரு முறை தேவதச்சன் சொன்னார். அவரது புகைப்படம் ஒன்று புத்தகப் பின் அட்டையில் வெளியாகி இருந்தது.
வண்ணநிலவனைப் பார்ப்பது என்று முடிவு செய்து நண்பன் ஒருவனின் திருமண நிகழ்விற்காகச் சென்னை வந்தபோது துக்ளக் அலுவலகத்திற்குத் தேடிச் சென்றேன். அலுவலக வாசல் வரை சென்ற பிறகு அவரை எப்படி உள்ளே போய்ப் பார்ப்பது என்று தயங்கி நின்றுகொண்டேயிருந்தேன். என்ன பேசுவது என்று மறந்துபோயிருந்தது. என்னோடு வந்திருந்த நண்பனுக்கு சோவை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை.
அவனிடம் வண்ணநிலவனைப் பார்க்க வேண்டும் என்று சொன்னால் கூட வரமாட்டானோ என்று துக்ளக் ஆபீஸ் வரை போய்வரலாம் என்று மட்டுமே சொல்லியிருந்தேன். அதனால் அவன் ஆர்வமாக வா உள்ளே போகலாம் என்று  இழுத்துக்கொண்டிருந்தான்.
நாங்கள் துக்ளக் அலுவலக வாசல் அருகே போன போது வண்ணநிலவன் இறங்கி வெளியே போய்க்கொண்டிருந்தார். என்னைக் கடந்து செல்கின்றவர்தான் வண்ண நிலவன் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது. அவர் ஏதோ யோசனையோடு இறுக்கம் நிரம்பிய முகத்துடன் மெதுவாக நடந்து போய்க் கொண்டிருந்தார். நான் அவர் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அலுவலகத்தில் சோ இல்லை என்று என்னோடு வந்த நண்பனை வெளியே அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
துர்வாசர் கட்டுரைகளுக்குத் தீவிரமான எதிர்வினை வந்து கொண்டிருந்த நாட்கள் என்பதால் அவரை வழியில் நிறுத்திப் பேசினால் ஏதாவது தவறாக நினைத்துக் கொண்டுவிடுவாரோ என்ற யோசனையுடன் திரும்பிவிட்டேன். ஆனால் அருகில் வண்ணநிலவனைப் பார்த்தது போதும் என்றிருந்தது. அவரது தோற்றத்திலே மிக அமைதியானவர். யோசனைகளால் பீடிக்கப்பட்டவர் என்று தோன்றியது.
அதை உறுதிசெய்வது போலவே அவர் இலக்கியம் பற்றி அதிகம் விவாதிக்க மாட்டார்.  இலக்கியக் கூட்டங்களில்கூட அதிகம் கலந்து கொள்ளமாட்டார். நண்பர்கள் என எவரையும் அவரோடு பார்த்ததில்லை. உரத்துப் பேசமாட்டார். காரணமற்ற பயம், கோபம் கொண்டவர் என்று அவரைச் சந்தித்த நண்பர்கள் பலரும் என்னிடம் சொல்லியிருந்தார்கள். ஏன் அப்படி என்று கேட்டபோது அவர் அப்படித்தான் என்று எல்லோருமே பதில் சொன்னார்கள். அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசை அதனாலே ஒளிந்து கொண்டது.
பின்பு ஒரு முறை துக்ளக் அலுவல்பணிக்காக மதுரை வண்ண நிலவன் வந்திருந்தார். நண்பர்கள் அவரைச் சந்திக்கச் சென்றார்கள். ஆனால் அவரிடம் பேசவேண்டும் என்று நினைத்திருந்த விஷயங்கள் யாவும் மனதின் ஆழத்திற்குள் சென்று புதையுண்டுவிட்டன. ஆகவே நான் வரவில்லை என்றேன்.
அவரைச் சந்தித்துத் திரும்பிய இரவில் அவரிடமிருந்த உற்சாகம், வியப்பு, அவருக்கென்றுள்ள தனித்துவமான கேலி என்று அவரைப் பற்றிய இன்னொரு பிம்பத்தை எனக்குத் தந்தார்கள். குறிப்பாக, தமிழக அரசியல் குறித்த அவரது தீர்க்கமான பார்வை, தமிழ் சினிமா பற்றி பகடிகள் பற்றி வியந்து சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
ஒரு நண்பர் வண்ணநிலவனிடம் கரிசல் இலக்கியம் பற்றிக் கேட்டதற்கு, கொஞ்சம் விட்டால் இவர்கள் வட்டார எழுத்தாளர்களுக்கு என்று தனியாக கரிசல்ஸ்தான் கேட்டு விடப்போகிறார்கள் என்று அவர் கேலி செய்ததைச் சொல்லிச் சொல்லிச் சிரித்தார்கள்.
அவரைச் சந்திக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கமாக இருந்தது. குரலை உயர்த்தாமல் கதை எழுதிய வண்ணநிலவனால் எப்படி இவ்வளவு ஆவேசமாக துர் வாசர் கட்டுரைகள் எழுத முடிகிறது. சமகால அரசியல் பற்றிய பார்வைகளைக் கூர்மையாகப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக எதை எழுதும்போது அவரது மொழி எப்படி இவ்வளவு நுட்பமாக வெளிப்படுகிறது என்று நினைத்து வியந்துகொண்டேயிருந்தேன்.
வண்ணநிலவனின் மொழியில் பைபிளின் ஆளுமை அதிகம்.  பைபிளில் வரும் வாசகங்களைப் போலவே தன்னுடைய கதை மொழியை அவர் உருவாக்கியிருந்தார். பைபிளின் மொழியை உள் வாங்கிய திருநெல்வேலி வட்டார கிறிஸ்துவ பிரயோகங்கள், சைவ வேளாளக் குடும்பங்களின் இயல்பான பேச்சு இரண்டும் அவரிடம் சிறப்பாக வெளிபட்டிருந்தன.  அவர் படித்தது பாளையங்கோட்டையில் . அது கிறிஸ்துவம் வேர் ஊன்றி வளர்ந்த இடம். அது காரணமாக இருக்கக்கூடும்.
அவரது கதைகளைத் தொடர்ந்து வாசித்த காரணத்தாலேதான் நானும் பைபிள் படிக்கத் துவங்கினேன். உயர்ந்த கவித்துவமும் முடிவற்ற கதையாடலும் ஆழ்ந்த தத்துவ வெளிப்பாடும் கருணையும் நிரம்பிய பைபிள் இன்றும் நான் விரும்பிப் படிக்கும் புத்தகமாக்கியிருக்கிறது. அதற்கு வண்ணநிலவனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது.
வண்ணநிலவன் படைப்புகள் தந்த உத்வேகத்தில் உடனடியாக பஸ் ஏறி அவர் கதைகளில் வரும் ஊர்களுக்குச் சென்று பார்ப்பது என்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் அலைந்து திரிந்தேன். மணப்பாடு தேவலாயத்தின் பிரமாண்டத்தையும் அங்குள்ள கிறிஸ்துவ ஈடுபாட்டையும்  நெருங்கிச்சென்று  கண்டேன். கடல்புரத்தில் எழுதப்பட்டது எந்த ஊராக இருக்கக்கூடும் என்று கடற்கரை கடற்கரையாக அலைகள் கால்நனைக்கச் சுற்றினேன்.
மணல்திட்டுகளும் பனையும் கடல்பாடுகளும், பழமையான தேவலாயங்களும், காகங்களும் நிரம்பிய நிலப்பரப்பு வண்ணநிலவன் கதைகளில் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. அது போலவே திருநெல்வேலியின். கல்லெத்தி முடுக்கையும், வாகையடி தெருவையும், ரெயீனிஸ் அய்யரையும், தாமிரபரணிப் படித்துறைகளையும், கம்பாநதியையும் பற்றி அவர் பதிவு செய்துள்ள விதம் அலாதியானது.
*
1989இல் ஒரு நாள் கோவில்பட்டியில் உள்ள கோணங்கி வீட்டில் வண்ணநிலவன் கதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உடனே அவர் சென்னைக்குப் போயி  நாம அவரைப் பாக்கலாமா என்று கேட்டார். அன்றிரவே சென்னைக்குக் கிளம்பினோம். வண்ணநிலவன் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லியபடியே மாம்பலத்தில் ரயிலில் இறங்கியவர் அப்படியே என்னை மந்தைவெளிப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அவர் கூடவே சென்றேன்.
எங்கேயிருக்கிறது வண்ண நிலவன் வீடு என்று  எனக்குத் தெரியாது. அவருக்கு நீண்டநாள் பழக்கம் இருக்கிறது என்பதால் அவர் அறிந்திருப்பார் என்று மௌனமாக அவரைப் பின் தொடர்ந்தேன். மந்தைவெளியில் இருந்த ஒரு வீட்டிற்கு அழைத்துப் போனபோது இதுதான் வண்ண நிலவன் வீடா என்று கேட்டேன். கோணங்கி பதில் சொல்லாமல் சிரித்தபடியே உள்ளே வா சொல்றேன் என்றார்.
வீட்டிலிருந்து சிவப்பான ஒரு மனிதர் வெளியே வந்து கோணங்கியைப் பார்த்துச் சிரித்து உள்ளே வரச்சொன்னார். நானும் கோணங்கியும் உள்ளே சென்றோம். கோணங்கி அவர்தான் அம்ஷன்குமார் என்று சொன்னார். நான் தலையாட்டிக்கொண்டேன். இருவரும் பேசிக்கொள்ளத் துவங்கினார்கள். மதியமானது.
அங்கிருந்து கிளம்பி அடையாறு சென்று இன்னொரு நண்பரை அறிமுகப்படுத்தினார். பிறகு அங்கிருந்து கிளம்பி தேனாம்பேட்டை வந்து சினிமாவில் ஒளிப்பதிவு உதவியாளராக உள்ளார் என்று இன்னொரு நண்பரை அறிமுகப்படுத்தினார். ஆனால் வண்ணநிலவனிடம் அழைத்துப் போகவேயில்லை. இரவில் கேட்டபோது நாளைக்குப் பாத்துக்கொள்ளலாம் என்றார். நான்கு நாட்கள் சென்னையில் அலைந்தபோதும் அவரைச் சந்திக்க அழைத்துப் போகவேயில்லை.  ஊர் திரும்புவதற்குள் வண்ணநிலவன் ஆசை வடிந்துவிட்டிருந்தது.
அதன் பிறகு  தொடர்ந்து கதைகள் எழுதத் துவங்கி சென்னைக்கு வருவதும்  போவதுமாக இருந்தேன். 1993ல் ஒரு முறை கோணங்கியோடு கல்குதிரை அச்சிடுவதற்காக அலைகள் அச்சகத்திற்குப் போகலாம் என்று சொல்லி அசோக் பில்லரில் இருந்து பேருந்து ஏறச்சொன்னார்.
சட்டென வழியில் சைதாப்பேட்டை துரைச்சாமி பாலம் அருகே இறங்கச் சொல்லிவிட்டு அருகில் உள்ள குடியிருப்பு ஒன்றிற்கு என்னை அழைத்துப் போனார். காலிங்பெல்லை அழுத்தியபோது கதவு திறக்கப்பட்டது. வண்ணநிலவன் நின்று கொண்டிருந்தார்.
அவர் கோணங்கியைப் பார்த்த சந்தோஷத்தில் உற்சாகமாகி யோவ்வாய்யா என்று அன்பாக அழைத்து உள்ளே வரச்சொன்னார். கோணங்கி என்னை அறிமுகப்படுத்தியதும் மிகுந்த அக்கறையுடன் என்ன படிக்கிறேன். எங்கே ஊர் என்று விசாரித்தார்.
சென்னைக்கு வந்து பலவருடமாகியும் அவரது பேச்சு மாறாமலிருந்தது. கோணங்கி அவர்கள் வீட்டில் கம்பங்கஞ்சி கிடைக்குமா என்று கேட்டார். அதைக் கேட்டதும் வண்ணநிலவன் முகத்தில் பிரகாசம் ததும்பியது. என்ன கேட்கான் பாத்தியா . . . மெட்ராஸ்ல வந்து கம்மங்கஞ்சி கேட்கான் என்று சிரிப்போடு சொல்லியபடியே அதைச் செய்றதுக்கு யாரு இருக்கா . . . அது எல்லாம் ஊரோடு போச்சு என்றார். அவரும் கோணங்கியும் பேசிக்கொண்டிருக்கும் போது சிரிப்பும் உற்சாகமான குரலும், ஊரின் நினைவுகளும் நிரம்பிய மனிதராக வண்ணநிலவனைக் கண்டேன். அவரோடு எதையும் பேசிக்கொள்ளவில்லை ஆனால் அது ரொம்பவும் பிடித்திருந்தது.
*
சென்னையில் யாரைப் பார்க்க விரும்புகின்றோமோ அவர் அருகாமையில் இருந்தால்கூடத் தேடிப் போய்ப் பார்க்கமுடியாதபடி மன நெருக்கடி உருவாகிவிடும். ஏதேதோ காரணங்கள், துரத்தல்கள் நம் விருப்பத்தின் பாதையை அழித்து நம்மைச் சுற்றவைத்துவிடும். அப்படி நானும் அலைந்து கொண்டிருந்தேன்.
தொண்ணூறுகளின் துவக்கத்தில் தமிழன் என்றொரு நாளிதழ் துவக்கப்பட்டது. அதில் அப்துல்ரகுமான் ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அதில் நான், கவிஞர் சுகுமாரன் இருவரும் சேர்ந்து பணியாற்றத் துவங்கினோம். இலவச இணைப்புகளாக அளிக்கப்படும்  துணை இதழ்களைத் தயாரிக்கும் பொறுப்பு எங்களுடையது. அப்போது வண்ணநிலவன் அங்கே  வேலைக்கு வந்து சேர்ந்தார். அவரோடு வேலை செய்கிறோம் என்பது மிகப் பெருமையாக இருந்தது.
அவருக்கோ பத்திரிகை வேலை அலுப்பூட்டுவதாகி அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவும் இருந்தார். ஆனாலும் குடும்பச் சூழல் காரணமாக அவர் பணியில் சேர்ந்திருந்தார். இரண்டு மாதங்கள்கூட இருக்காது. அந்தப் பணியில் இருந்து நின்றுகொண்டார்.
அவரோடு சேர்ந்து வேலை செய்தநாட்களில்கூட அதிகம் பேசியதில்லை. எதிர்ப்படும் போது ஒரு சிரிப்பு. எப்போதாவது ஒரு வார்த்தை அவ்வளவே அவரிடமிருந்து கிடைக்கும். அது போதும் என்று தானிருந்தது.
வண்ணநிலவன் ஆகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர். மார்க்வெஸ் கதையை அவர் தமிழாக்கம் செய்திருக்கிறார். மிக நேர்த்தியான மொழியாக்கம். அது போலவே குல்தீப் நய்யாரின் கட்டுரைகள் தமிழில் தீவிரமான கவனத்திற்கு உள்ளானது இவரது மொழிபெயர்ப்பின் காரணத்தால்தான். அதிகம் கவிதைகள் எழுதியதில்லை. ஆனால் அவரது மெய்ப்பொருள் என்ற கவிதைத் தொகுப்பு நவீனக் கவிதை உலகில் மிக முக்கியமானது.
அவள் அப்படித்தான் என்ற படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். அது தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று. திரைப்பட சங்கத் திரையீடுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு உலக சினிமாவை அறிந்தவர் வண்ண நிலவன். ஆனால் அவர் விரும்பியபடி தமிழ் சினிமாவில் அவரால் செயல்பட முடியவில்லை.
அதன்பிறகு வண்ணநிலவனை சுபமங்களா அலுவலகத்திற்குச் செல்லும் நாட்களில் எல்லாம் சந்தித்திருக்கிறேன். எழுத்து, இலக்கியம், சமகால அரசியலுக்கான எதிர்வினை போன்றவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற தீவிர மனப்போக்கு கொண்டவராக அப்போது இருந்தார்.
என்னய்யா இது . . . சள்ளை என்று அடிக்கடி சொல்வார். அவரது கதைகளைப் பற்றி யாராவது மிக உயர்வாகப் பேசும் போதுகூட அவரிடம் சலனமிருக்காது. இதில் என்ன இருக்கிறது என்பது போலவே கேட்டுக்கொண்டிருப்பார். அவரது மனது நிலை கொள்ளாமல் இருந்த நாட்கள் அவை. ஏன்  அப்படியிருக்கிறார் என்று எவருக்கும் தெரியாது.
கோமலின் மறைவுக்குப் பிறகு சுபமங்களா நிறுத்தப்பட்டது. அதன் பிறகு அவரைச் சந்திப்பது அரிதாகிப் போயிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருமுறை அவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அவரது முகவரியைக் கண்டுபிடித்து லிபர்ட்டி தியேட்டர் அருகில் உள்ள அவரது வீட்டிற்குப் போயிருந்தேன்.
அவர் மட்டுமே வீட்டில் இருந்தார். அன்றைக்கு அவருக்குப் பேரன் பிறந்திருந்தான். அதனால் யாவரும் மருத்துவமனையில் இருந்தார்கள். அவரும் மருத்துவ மனைக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் உற்சாகமாகி லட்டு தந்து சாப்பிடச் சொன்னார். சிரித்தபடியே கையைப் பிடித்துக்கொண்டார். நெகிழ்வாக இருந்தது. அவர் முகத்தில் இருந்த சந்தோஷம் அற்புதமானது. அது உடல் முழுவதும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இருவரும் வெளியே வந்து ஆளுக்கொரு திசையில் பயணம் செய்யத் துவங்கினோம்.
இருபது வயதில் அவரோடு பேசவும் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும் என்ற வேட்கை எனக்குத் ததும்பிக்கொண்டிருந்தது. இன்று அந்தப் பேச்சு உறைந்து போய் வியப்பாக உள்ளது. மறுபடியும் மறுபடியும் அவரை வாசிக்கும் போதும்  ஏற்படும் வியப்பும் நெருக்கமும் அளவில்லாதது.
இன்று வண்ணநிலவன் தானே விரும்பி  எழுத்து இலக்கியம் யாவிலிருந்தும் ஒதுங்கி தனக்கு விருப்பமான புத்தகங்களை வாசித்துக் கொண்டு மனம் விரும்பிய தருணங்களில் ஏதாவது எழுதிக்  கொண்டிருக்கிறார். இலக்கியப் போட்டிகள், விவாதங்கள், சர்ச்சைகள், எதிலும் அவருக்கு விருப்பமில்லை. அவரது கதைகள், கட்டுரைகள் இன்றைக்கும் தனக்கான வாசகர்களோடு அந்தரங்கமாகப் பேசிக்கொண்டும் வாழ்வின் நுட்பத்தைப் பகிர்ந்து கொண்டுமிருக்கின்றன.
விருதுகள், அங்கீகாரங்கள், பாராட்டுகள்,  எதையும் விரும்பாமல் தன்னில் வந்தமரும் நூறு நூறு பறவைகளை அனுமதித்து இளைப்பாறுதல் தரும் விருட்சம் போல நிசப்தமாக யாவையும் அனுமதித்து எவர் மீதும் விரோதமின்றி உலகின் பேரியக்கத்தினை அவதானித்துக் கொண்டிருக்கிறார் வண்ணநிலவன்.  ஏன் இப்படியிருக்கிறார் என்று பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள் எனக்குத் தெரிந்த ஒரே காரணம் அவர் அப்படித்தான்.
எஸ். ஐ. சுல்தான்
This entry was posted in அனைத்தும், வண்ணநிலவன், வண்ணநிலவன் குறித்து and tagged , . Bookmark the permalink.

3 Responses to அவர் அப்படித்தான் : எஸ். ராமகிருஷ்ணன்

 1. M.SIgappi சொல்கிறார்:

  Sir,I also want to see you. Is it possible?
  Such a good article.

 2. உயிர்மையில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் கட்டுரை படித்துத்தான் வண்ணநிலவனது எஸ்தர் சிறுகதை படித்தேன். பிறகு தமிழ்த்தொகுப்புகள், அழியாசுடர்களில் நிறைய வாசித்தேன். சமீபத்தில் கடல்புரத்தில் நாவல் வாசித்தேன். எஸ்.ராமகிருஷ்ணன் வண்ணநிலவனை மிக அருமையாக தன் எழுத்தால் வரைந்து இருக்கிறார். அற்புதமான பகிர்வு. நன்றி.

 3. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  இந்தக் காலத்தில் இப்படி ஒருவரா? என்று மிகுந்த வியப்பு உண்டாகின்றது.
  இவரது கேணி சந்திப்பு உரையாடலைக் கேட்டபொழுது மிகுந்த துயரம்
  உண்டாயிற்று.தமிழ் இலக்கிய உலகம் இவரை நன்கு கொண்டாட வேண்டும்
  என்று தோன்றுகிறது.எந்த உயர்வையும் புறந்தள்ளுபவராகவல்லவா இருக்கிறார்.
  கோடியில் ஒருவர் என்றுதான் கூறத் தோன்றுகிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s