தமிழில் விமர்சகர்களே இல்லை!

இலக்கியம்’ கலையா, சமுதாய மாற்றத்துக்கான கருவியா என்ற விவாதம் இன்னும் நடந்து கொண்டிருப்பதுபோல், ‘விமர்சனம்’ என்பது ரசனை அடிப்படையில் அமைய வேண்டுமா, கோட்பாட்டு அடிப்படையில் அமைய வேண்டுமா என்ற சர்ச்சையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்களும், தமிழ் விமர்சகர்களும் இரண்டு பிரிவாக நின்று இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கோட்பாட்டை முன்வைத்தே விமர்சனம் எழுதுகின்றனர். கல்வித் துறை சாராத விமர்சகர்களில் சிலரும் கோட்பாட்டு விமர்சனத்தை முன் வைக்கின்றனர். பாரதிக்குப் பிந்திய தமிழ் இலக்கியம் என்பது மணிக்கொடி போன்ற இலக்கியப் பத்திரிகைகளில்தான் வளர்ந்தது. இன்று போலவே அன்றும் இலக்கியப் பத்திரிகைகளில் விமர்சனம் என்பது பெரும்பாலும் புத்தக விமர்சனமாகவே இருந்தது.
ஒரு நாவலையோ அல்லது கவிதையோ அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட விமர்சனங்கள் மிக மிகச்சொற்பம். பெரும்பாலான விமர்சனக் கட்டுரைகள் போகிற போக்கில் அபிப்பிராயங்களை  உதிர்த்துச்சென்ற விமர்சனங்களாகவே இருந்தன; இருக்கின்றன. ஒரு படைப்பாளியின் ஒட்டு மொத்தப் படைப்புகளையும், அழகு கெடாமல் கலாபூர்வமாகவும், ஆழமாகவும் விமர்சித்த விமர்சனங்கள் இன்று வரை தமிழில் இல்லை.
கல்லூரிப் பேராசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் கல்விப் புலத்திற்கு ஏற்ற சட்டகத்தில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், வண்டி வண்டியாகக் குவிந்து கிடக்கின்றன. ஒரு பக்கம் இலக்கியப் பத்திரிகைகளில் எழுதப்படும் புத்தக மதிப்புரைகளை விமர்சனமாகக் கருதும் போக்கும், இன்னொரு பக்கம் கல்வித் துறையில் எழுதிக் குவிக்கப்படும் வறண்ட ஆய்வுக் கட்டுரைகளுமே ‘தமிழ் இலக்கிய விமர்சனம்’ என்ற மயக்கத்தைத் தோற்றுவிக்கின்றன.
விமர்சனம் என்பது வெறும் கோட்பாடோ, ஆய்வோ அல்லது வெறும் ரசனை சார்ந்து உதிர்க்கப்படம் அபிப்பிராயங்களோ அல்ல. மொழியின் அழகும், படைப்பின் ஆழமும் ஒரு சேர வெளிப்படும் அபூர்வமான கலையே விமர்சனம் என்பது. ஒரு படைப்பையோ, அல்லது ஒரு படைப்பாளியின் ஒட்டுமொத்த மன உலகையோ நளினமும், அழகும் மிக்க உரைநடையில் ஆழமான வீச்சுடன் எழுதத் தெரிந்தவனே முதல் தரமான விமர்சகன். இதுபோன்ற விமர்சன மனோபாவம் கொண்ட விமர்சகர் தமிழில் இல்லவே இல்லை. இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லோரும் அரைகுறை விமர்சகர்களே.
பழைய சங்க இலக்கியங்களிலும், புதுமைப்பித்தனைப் போன்ற உரைநடையாசிரியரிடமும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த வையாபுரிப் பிள்ளை கூட, மேலெழுந்தவாரியான அபிப்பிராயங்களையும், முடிவுகளையுமே தனது கட்டுரைகளில் சொல்லிக் கொண்டு போகிறார். புதுமைப்பித்தனது சிறுகதைகளுக்கு முதல் முதலாக முன்னுரை எழுதிய ரா. ஸ்ரீ. தேசிகனின் அந்த முன்னுரைக் கட்டுரையில் மதுரமான நடையிருக்கிறது. ஆனால், ஆழமில்லை என்றாலும் வையாபுரிப் பிள்ளையும், ரா.ஸ்ரீ. தேசிகனும் வியக்கப்பட்டவர்கள். வையாபுரிப் பிள்ளையின் பழைய இலக்கியங்களில் கால நிர்ணயம் பற்றிய ஆராய்ச்சியில் உள்ள ஆழம், அவை எப்படி இலக்கியமாகின்றன என்பதில் இல்லை. இதை நுட்பமான வாசகனால் உணர்ந்து கொள்ள முடியும்.
புதுமைப்பித்தனைப் போல க.நா.சு, சி.சு. செல்லப்பா, தொ.மு.சி. ரகுநாதன், சுந்தரராமசாமி, இன்றைய ஜெயமோகன் வரை பல உரைநடையாசிரிகளும் விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றனர். புதுமைப்பித்தனுடைய விமர்சனக் கட்டுரைகள் அவரது சிறுகதைகளின் நடையைப்போல் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் ஜனித்தவை. மின்னல் கீற்றுகளின் ஜாலம் நிரம்பியவை.
‘க.நா.சு.’ என்ற க.நா. சுப்பிரமணியத்தின் விமர்சன பாணி அவரது தனிப்பட்ட ரசனையிலிருந்து உருவானது. ஆனால், அவரது ரசனை, உலக இலக்கியங்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்ட ரசனை. தனது ரசனையை அபிப்பிராயங்களாகவே வெளிப்படுத்தினார். ஆழம் அவ்வளவாக இல்லாதது. புதுமைப்பித்தனைப் போலவே மின்னல் கீற்றுகள் போல் சில பகுதிகள் தென்பட்டாலும், அவை விரிவற்றவையே.
சி.சு. செல்லப்பாவின் விமர்சனம் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களின் கட்டுரைகளைப் போல், படிப்படியாகத் தனது வாதங்களை எடுத்து வைப்பவை. விரிவான அலசல் விமர்சனம் அது. ஆனால், நளினமற்றது. நடையழகில்லாதது. தொ.மு. சிதம்பர ரகுநாதனின் பாரதியின் காலம் பற்றிய கட்டுரை சற்று ஆழமானதுதான். ஆனால், செல்லப்பா, க.நா.சு.வைப் போலவே மொழியின் அழகு கூடி வராதது.
சுந்தரராமசாமி விமர்சனக் கட்டுரைகளில் அவரது அபாரமான உரைநடை அழகு கொட்டிக் கிடக்கிறது. ஆனால், சுந்தரராமசாமி தனது முடிவுகளில் தவறு செய்யக் கூடியவர். ஒரு கவிஞனின் உணர்ச்சிகரமான மனநிலையைக் கொண்ட சு.ரா. சம்பத், இமையம், நாரணோ ஜெயராமன் போன்ற படைப்பாளிகளை மிகையாகப் பாராட்டியவர்.
ஜெயமோகன் தனது பெரும்பாலான கட்டுரைகளில், கோட்பாடுகளை நிறுவிவிட்டு, அதை நியாயப்படுத்தும் முயற்சிகளில் அலுப்பூட்டும் விதமாக ‘கூறியது கூறல்’ என்ற பிழையைச் சர்வசாதாரணமாகச் செய்பவர். (அவரது கதைகளும் இதே தன்மை கொண்டவைதான்.) சுந்தரராமசாமியின் காலடிச் சுவட்டில் நடப்பவராகத் தோன்றும் ஜெயமோகனால் ஒருபோதும், சு.ரா. தனது கட்டுரைகளில் தோற்றுவிக்கும் உரைநடையின் லகரியைத் தோற்றுவிக்கவே முடியாது.
‘வெ.சா.’ என்ற வெங்கட் சுவாமிநாதனும் உணர்ச்சிகரமான, வேகமான உரைநடைக்குச் சொந்தக்காரர்தான். இவர் இலக்கியத்தைத் தாண்டி நாடகம், சினிமா, ஓவியம் குறித்தும் தீவிரமான அபிப்பிராயங்களைச் சொல்கிறவர். ஆனால், தனது அபிப்பிராயங்களைத் தரப்படுத்தாமல் எழுதுகிறவர் வெ.சா. இலக்கியத்தில் தி. ஜானகிராமனை வியப்பவர் வெ.சா. மற்றப் படைப்பாளிகளைவிட தி.ஜா. எப்படி உன்னதமான இலக்கியத்தைப் படைத்துள்ளார் என்பதை வெ.சா. ஒருபோதும் தரப்படுத்திச் சொன்னதே இல்லை. டி.கே. பத்மினியின் ஓவியங்களை வியக்கிறார் வெ.சா. எந்த அடிப்படையில் டி.கே. பத்மினி வியப்பிற்குரிய கலைஞர் என்பதை விரிவாகவோ, ஆழமாகவோ தரப்படுத்த இயலாதவர். பெரிய விமர்சகரைப் போல் தோற்றம் தரும் வெ.சா.வுக்கும், க.நா.சு.வுக்கும் அதிக வித்தியாசமில்லை.
க.நா.சு.வும் மேலெழுந்தவாரியாக தனது அபிப்பிராயங்களை சற்று மொன்னையும், மிதமுமான உரைநடையில் சொன்னவர். இதேபோல்தான் வெங்கட் சுவாமிநாதனும் தனது கட்டுரைகளில் அபிப்பிராயங்களைக் கொட்டுகிறார். ஆனால் க.நா.சு.வைவிட வேகமான நடையில் எழுதியவர் வெ.சா. வேகமும், விரிவும் உண்டு. ஆனால், ஆழமில்லை வெ.சா.விடம்.
சி.சு. செல்லப்பா, க.நா.சு., வெங்கட் சுவாமிநாதன் போன்றவர்கள் தங்களுடைய ரசனை சார்ந்து அபிப்பிராயங்களைச் சொன்னவர்கள். இவர்களிடம் இலக்கியக் கோட்பாட்டு அடிப்படையிலான அணுகுமுறை எதுவும் கிடையாது. அழகியல், செவ்வியல் கோட்பாடுகள் கூட இவர்களிடம் இல்லை. ஆனாலும், இவர்கள் தங்களது அபிப்பிராயங்களுக்காக தமிழ் வாசகர்கள் மத்தியில் ‘விமர்சகர்கள்’ என்று கொண்டாடப்படுகின்றனர். இவர்களை வியந்து கொண்டாடாமல், தூர விலகி நின்று பார்க்கும் வாசகனுக்கு இவர்களது குறைகள் தென்படாமல் போகாது.
முழுக் கட்டுரையையும் படிக்க: http://www.aazham.in/?p=851
This entry was posted in அனைத்தும், வண்ணநிலவன், வண்ணநிலவன் குறித்து, வண்ணநிலவன் நேர்காணல் and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to தமிழில் விமர்சகர்களே இல்லை!

  1. தமிழில் திறனாய்வாளர்கள் குறித்த அற்புதமான கட்டுரை. பகிர்விற்கு நன்றி.

  2. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான கட்டுரை.
    நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s