அன்பின் சுடர் மின்னும் கலங்கரை விளக்கம்

முனைவர் ப. சரவணன்

http://www.vadakkuvaasal.com/component/content/article/437.html

வண்ணநிலவனின் கடல்புரத்தில்
மகத்தான புனைவுகள்: 

கடலும் கடல் சார்ந்த வாழ்வும் நெய்தல் திணைக்குரியது.  நெய்தலில் வாழும் பெண்களுக்கு மணலும் ஆண்களுக்குக் கடலும் நிலப்பரப்பாக, வாழ்க்கை வெளியாக அமைகின்றன. கடற்கரையைத் தொட்டுச் செல்லும் கடலின் அலைக்கரங்கள் மணலுக்கும் கடலுக்குமான மக்களின் ஊடாட்டத்தைக் காட்சிப்படுத்துகின்றன. இந்த ஊடாட்டம் அன்பால் நிலைபெறுவதாக வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவல் உணர்த்துகின்றது.

எங்கும் கடல்சார் வாழ்க்கை இனிப்பாக இருப்பதில்லை. உப்புக் கடலில் உழைப்பை மட்டுமே  முதலீடாகக் கொண்ட  எளிய மனிதர்களின் கடினமான வாழ்க்கை தொடர்வது வெளித் தெரியாத அன்புப் பிணைப்பினால் மட்டுமே என்பதனை இந்நாவல் வெளிப்படுத்தியுள்ளது. ‘துயரம் மிக்க கடல் வாழ்வை விரும்பத்தக்கதாக மாற்றுவது அன்பு மிக்க உறவுகளே’ என்பது இந் நாவலின் மையம்.

இந்நாவலை 1977ஆம் ஆண்டு வண்ணநிலவன் எழுதினார். இந்நாவலுக்காக அவர் இலக்கியச் சிந்தனை விருதினைப் பெற்றார். இந்நாவல் சென்னை தொலைக்காட்சியில் தொடராக வெளிவந்தது.  அத்தொடரில் பிலோமியாகச் சபீதா ஆனந்தும், ஐசக்காக லிவிங்ஸ்டனும்  – வாழ்ந்து காட்டியிருந்தனர். அப்போது நான் பதின்பருவத்தின் தொடக்கத்தில் இருந்தேன்.  அத்தொடரைப் பார்த்தபோது ஐசக்காக நடித்த லிவிங்ஸ்டன் தன் லாஞ்சியிலேறி நின்றபடி திமிருடன் சிரிக்கும் காட்சி என் நெஞ்சில் பதிந்தது. பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கடல்புரத்தில் நாவலை வாசித்தபோது, காதலில் மூழ்கிக் கடலையே பார்த்தபடி பிலோமி நின்றிருப்பது என் மனத்துள் பதிந்தது. இப்போது இக்கட்டுரைக்காக  இந்நாவலை மீண்டும் மீண்டும் வாசித்தபோது அன்பே கடலாக உருவெடுத்து மனிதர்களைத் தன் அலைக்கரங்களால் அழைப்பதனை உணர்ந்தேன்.

பதின்பருவத்தில் வெற்றியின் எக்காளமும் கல்லூரிக் காலத்தில் காதலின் பின்விளைவுகளும்; முதிர்ந்த பருவத்தில் அன்பின் பெருங்கருணையும் நம்மைத் தொற்றிக் கொள்கின்றன என்பதை இந்நாவல் தந்த அனுபவங்களின் வழியே உணர்கின்றேன்.  படிப்பவர்களின் பருவச்சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் இந்த நாவலின் ஒட்டுமொத்த பொருண்மைதான் என்ன?

எளிய மனிதர்களின் கடல்சார்ந்த கடினவாழ்வு ஒருபுறம். காதலும் காமமும் நிறைந்து பொங்கிச்; சுழித்தோடும் அன்பும் பொய்யும் வன்மமும் கொண்ட உள்ளங்கள் மறுபுறம். இவற்றிற்கு நடுவே பொருளியல் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளோடு கூடிய நிலையற்ற வாழ்வு. கடல் + பெண் + காதல் ஓர் இழை. கடல் +  செல்வம் + காமம் மற்றொரு இழை. இவற்றை எதிர்வெட்டிச் செல்லும் கடல் + அன்பு + நம்பிக்கை என்ற ஓர் இழை. இந்த மூன்று இழைகளின் முடிச்சுதான் ‘கடல்புரத்தில்.’  ‘கடல்’ அன்புக்கும் ‘மணல்’ மனிதவாழ்க்கைக்கும் வல்லம்’ வறுமைக்கும் ‘லாஞ்சு’ வளமைக்கும் ‘தேவாலயம்’ நம்பிக்கைக்கும் குறியீடாக இந்நாவலில்; காட்டப் பெற்றுள்ளன.

இந்நாவலைப் படிக்கும் பலருக்குப் பிலோமியும் சாமிதாசும்தான் முதன்மையாகப் படுவர். அவர்களிடமிருந்தது அள்ளக் குறையும் கட்டுப்பாடற்ற காதலுறவு.

இக்காதலுறவை நம்பிக்கையெனும் உரைகல்லில் தோய்க்கும் போது அது ‘போலி’ என்பது தெற்றெனத் தெரிந்து விடுகின்றது.

போலிகளை எப்படிக் கதைநாயகர்களாக ஏற்க முடியும்? ஆதலால், எனக்கு வாத்தியாரும் மரியம்மையும்தான்  முதன்மையாகப் படுகின்றனர். இவர்களிடமிருந்தது அள்ள அள்ளக் குறையாத அன்புறவு. இந்த அன்புறவு காலத்தால் கரையாத தன்மையதாய் உண்மையின் முத்திரையாய் வெளிப்பட்டுள்ளது. நான் இவர்களைத்தான் இந்நாவலின் கதைநாயகர்களாகக் கருதுகின்றேன். இவர்களும் இவர்களின் வாழ்க்கையைப் போலவே இந்நாவலில் ஒளிந்து, மறைந்து வருகின்றனர்þ வாழ்கின்றனர்.

வாத்தியாரும் அந்த ஊராரைப் பொருத்தவரை மர்மம் நிறைந்தவர்தான். அவருக்கும் மரியம்மைக்கும், அவருக்கும் பிலோமிக்கும் இடையிலான உறவுநிலை ஊராருக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. வாத்தியாருக்கும் மரியம்மைக்கும் இடையேயுள்ள உறவு நிலையினை வாசகர்கள் புரிந்துகொள்ள, வாத்தியாருக்கும் பிலோமிக்கும் இடையேயுள்ள உறவுநிலைதான் உதவுகின்றது. கடல் எல்லாவற்றையும் உள்வாங்கவல்லது. அந்த வாத்தியாரும் எதிரி, நண்பர் என்ற பாகுபாடின்றிப் பெரும் புன்னகையுடன் அனைவரையும் உள் வாங்கிக் கொள்கிறார்.

நிலத்திலிருக்கும் கடல் அவர்.

அதனால் தான் தன் தனிமைகளின்போது எப்போதும் கடலையே வெறித்துப் பார்த்து அமைதி கொள்ளும் பிலோமி வாத்தியாரிடம் அக்கடலைக் கண்டு அவரிடமே அடைக் கலமாகின்றாள். இந்நாவலின் இறுதி வரிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.  ஒரு நாவலில் துணைநிலைக் கதைமாந்தர்கள் முதன்மை பெறுவது தமிழ்ப் படைப்புச் சூழலில் ஒரு புரட்சிதான். இத்தகையப் புரட்சியினை ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவலிலும் காணமுடிகின்றது.

ஒரு சமூகத்தின் மீட்சி வெறும் மத மாற்றத்தினால் மட்டும் சாத்தியப் படாது; கல்வியறிவு மற்றும் தொழில் மாற்றம் போன்றவற்றால் மட்டுமே சாத்தியம் என்ற கருத்து இந்நாவலின் தொடக்க வரியிலிருந்தே  உணர்த்தப்பட்டுள்ளது. வாசிக்க, வாசிக்கப் பல தகவல்களை அள்ளித் தரும் இந்நாவல் என்னளவில் மகத்தான புனைவுதான்.

வண்ணநிலவன்

திருநெல்வேலியில் 15-12-1949 ஆம் நாள் உலகநாத பிள்ளை, ராமலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு ‘வண்ணநிலவன்’ என்று அழைக்கப்படும் உ.நா. ராமச்சந்திரன் பிறந்தார். 1970 முதல் எழுதி வருகின்றார். இவரது முதல் கதை ‘மண்ணின் மலர்கள்’ ஆகும். இவரது முதல் நாவல் ‘நேசம் மறப்பதில்லை நெஞ்சம்’ (1975) என்பதாகும்.

07-04-1977ஆம் நாள் சுப்புலட்சுமி என்பவரை மணந்தார். இவருக்கு ஆனந்த் சங்கர் என்ற மகனும் சசி, உமா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். இவருக்கு அபிஷேக், ஸ்ரீசஞ்சனா ஆகிய இரண்டு பேரப்பிள்ளைகளும் உண்டு.

இவரது நாவல்கள்: 1. நேசம் மறப்பதில்லை நெஞ்சம் (1975), 2. கடல்புரத்தில் (1977), 3. கம்பாநதி (1979), 4. ரெயினீஸ் அய்யர் தெரு (1981), 5. காலம் (2006) ஆகியனவாகும்.

இவரது சிறுகதைகள்:  1. எஸ்தர் (1976), 2. தர்மம் (1983), 3. உள்ளும் புறமும் (1990), 4. தாமிரபரணிக் கதைகள் (1992), 5. தேடித் தேடி கதைகள் (1996), 6. யுகதர்மம் (1996), 7. வண்ணநிலவன் கதைகள் (2001) கவிதைத் தொகுதி: மெய்ப்பொருள் (1981)

இவரது பல கதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம் மற்றும் கவிதைகள் ஜெர்மன் மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

தொடர்பு முகவரி: வண்ணநிலவன், ஜி-1, சின்முத்ரா அபார்ட்மெண்ட்ஸ், 14, முதல் குறுக்குத் தெரு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை  600024. தொடர்பு எண்கள்: 044-24731929, 9789983529.

இணையதளம்: https://wannanilavan.wordpress.com

படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடல்புரத்தில், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள் குறித்து, வண்ணநிலவன் குறித்து and tagged , , , , . Bookmark the permalink.

3 Responses to அன்பின் சுடர் மின்னும் கலங்கரை விளக்கம்

 1. வாசிக்க, வாசிக்கப் பல தகவல்களை அள்ளித் தரும் இந்நாவல் என்னளவில் மகத்தான புனைவுதான்.\\ உண்மைதான். ஒவ்வொருவருக்கும் கடல்புரத்தில் பல அரிய விசயங்களைக் கற்றுத்தருகிறது. பகிர்விற்கு நன்றி.

  • p. saravananDr. P. Saravanan சொல்கிறார்:

   மிக்க நன்றி சித்திரவீதிக்காரன் அவர்களே! நீங்கள் மதுரைக்காரரா? அங்கு சித்திரவீதி உண்டு. கடல்புரம் அன்பைப் பெறவிரும்புவோரும் பகிர விரும்புவோரும் படிக்கவேண்டிய ஒரு மகத்தான புனைவு.
   நன்றி.
   – முனைவர் ப. சரவணன்.

   • நான் மதுரைக்காரன்தான். மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலைச்சுற்றியுள்ள வீதிகளுக்கு சித்திரைவீதிகள் என்று பெயர். தமிழில் நாவல் வாசிக்க விரும்புவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் ‘கடல்புரத்தில்’. சரவணன் அவர்களுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s