வெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்புரத்தில்

http://ramasamywritings.blogspot.com/2012/01/blog-post_13.html

தமிழ்ச் சிறுகதை தோன்றிய பத்தாண்டுகளிலேயே நவீன சிறுகதையாக மாறி விட்டது. ஆனால் தமிழ் நாவல் தன்னை நவீனமாக்கிக் கொள்ள எடுத்துக் கொண்ட காலம் முக்கால் நூற்றாண்டு என்பது நாவல்  வரலாற்றில் சொல்லப்பட வேண்டிய உண்மை. தொடர் நிகழ்வுகளை அடுக்கி நீண்ட வரலாற்றைச் சொல்ல உரைநடையை வெளிப்பாட்டுக் கருவியாக  மாற்றிக் கொண்ட போதிலும், காவியபாணியும் புராணிகத் தன்மையும், கதை சொல்லலில் கைவிடப் படாமல் தான் இருந்தன. சிறுகதை இலக்கியம் நவீன சிறுகதையாக மாறியதைப் பார்த்தே நாவல் இலக்கியம் நவீன நாவலாக மாறியது என்று கூடச் சொல்லலாம்.
நவீனப் புனைகதை இலக்கிய உருவாக்கம் என்பது உலகமொழிகள் பலவற்றிலும் யதார்த்தவாத வெளிப்பாட்டு முறையின் தோற்றத்தோடு தொடர்பு கொண்டிருந்தது. இதற்குத் தமிழும் விதிவிலக்கில்லை.1960-களில் எழுதப்பட்ட நாவல்கள் முழுமையாகப் படர்க்கையில் கதைசொல்லும் முறையைச் சாத்தியமாக்குவதற்கு முன்பு வரை வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் உருவாக்கித் தந்த புராணிகத் தன்மை கொண்ட சரித்திரங்களும், வடுவூரார், ரங்கராஜுலு போன்றவர்களால் எழுதிக் காட்டிய துப்பறியும் கதைகளும் தன்மைக் கூற்றிலும், முன்னிலைக் கூற்றிலுமே நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தன. யதார்த்தவாத வெளிப்பாட்டு முறைதான் நவீனத் தமிழ் நாவலை உருவாக்கித் தந்தது. படர்க்கைக் கதை சொல்லல் என்னும் கூ.ற்று முறையைத் தனதாக்கிக் கொண்டு காவியத்தன்மையையும் புராணிக மாயங்களையும் விலக்கி தமிழ் நாவல் நவீனத்தன்மையை அடைந்த போது கதைசொல்லி தொலைந்து போவது அல்லது கடவுளின் இடத்திற்குப் பயணமாவது என்னும் மாயம் நடந்துவிடும். அந்த மாயத்தை முழுமையாக வாசிக்க விரும்பும் ஒருவருக்கு நான் பரிந்துரை செய்யும் தமிழ் நாவல் வண்ண நிலவனின் கடல்புரத்தில்.
கடல்புரத்தில் நாவலை எழுதியதன் மூலம் வண்ணநிலவன் தமிழ் வாசகர்களுக்குப் படிக்கத் தர நினைத்த உலகம் அதுவரை தமிழில் பதிவு செய்யப்படாமல் இருந்த மீனவக் கிராம வெளியும்  மீனவ வாழ்க்கையும் என்பதை அந்நாவலை வாசிக்கும் ஒருவர் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். கிராம வெளியும், அதன் வாழ்க்கை முறையையும் சொல்வது நாவல் இலக்கிய நோக்கமாக ஆக முடியாது. குறிப்பிட்ட வெளியில் குறிப்பிட்ட காலகட்டத்தில் வாழ நேரும் மனிதர்கள் தாங்கள் சந்திக்கும் புதுவகை நெருக்கடிகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைக் காட்டுவதும், அதற்கு அவர்களின் பாரம்பரியமான வாழ்க்கை முறையும் மன அமைப்பும் எவ்வாறு உதவுகின்றன அல்லது முரண்படுகின்றன எனப் பேசுவதும் தான் நவீன நாவல் இலக்கியத்தின் நோக்கமாக இருக்க முடியும்.
வண்ணநிலவனின் கடல்புரத்தில் முழுமையான கிராம வாழ்க்கையை எழுதிக் காட்ட ஒற்றைக் குடும்பத்தை மட்டுமே தேர்வு செய்துள்ளது. அந்தக் குடும்பத்தின் இரண்டு வருட கால நிகழ்வுகளை மட்டுமே எழுதிக் காட்டியுள்ளது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. பாரம்பரியமான மீனவத் தொழிலைக் கைவிடச் சொல்லும் படித்த புதிய தலைமுறை வாரிசோடு முரண்படும் தகப்பன் குரூஸ் மிக்கேல் – மகன் செபஸ்தியான்முரண்பாட்டை முதல் நிகழ்வாக்கித் தொடங்கும் கடல் புரத்தில் நாவல், அக்குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களின் அந்தரங்க வாழ்க்கையில் இருக்கும் ரகசியங்களுக்குள் மெல்ல மெல்ல நுழைந்து வாசகர்களை உடன் அழைத்துச் செல்கிறது. வல்லத்தை விற்றுவிட்டு தன்னோடு வந்து தங்கி விடச் சொல்லும் செபஸ்தியானின் விருப்பத்தை ஏற்றுக் கொள்ளாத மிக்கேலின் மகள் பிலோமி, மிக்கேலுக்குப் பிடிக்காத லாஞ்சிக்காரர் ஒருவனின் மகனான சாமிதாஸைக் காதலிக்கிறாள். லாஞ்சுக்குச் சொந்தக்காரனானதால் வல்லத்துக்குச் சொந்தக்காரனின் மகளான பிலோமியைக் கல்யாணம் செய்ய சாமிதாஸின் அப்பச்சி சம்மதிக்க மாட்டார் என்பதை அறிந்திருந்த போதும் பிலோமி அவனைக் காதலிக்கிறாள்; தனது உடலை அவளுக்குத் தருகிறாள்.
சாமிதாஸைத் தனது மகள் காதலிக்கிறாள் என்பதை மிக்கேலும் அவரது மனைவி மரியம்மையும் அறிந்திருந்தாலும் பெரிதாகக் கண்டிப்பதில்லை. இந்த வயதில் ஒரு பெண், ஒரு ஆணைக் காதலிப்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதுபோலக் கண்டும் காணாமலே இருக்கிறார்கள். அதைக் கண்டும் காணாமல் இருப்பதை கூடப் புரிந்து கொள்ளலாம். மகனோடு போகாமல் இந்தக் கிராமத்திலேயே கிடப்பேன் எனப் பிடிவாதம் செய்யும் தனது போக்கு தேவையற்றது என வாதிடும் மிக்கேலின் மனைவிமரியம்மைக்கு அந்த ஊரில் இருக்கும் வாத்தியோடு நீண்ட காலமாக நட்பு இருக்கிறது என்பதும், அந்த நட்புக்குக் கிராமம் தந்துள்ள அர்த்தம் கள்ளத்தொடர்பு என்பதும் தெரிந்த பின்பும் மிக்கேல் அவளைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சரியம். வல்லத்தை நம்பி வாழும் தனது வாழ்க்கையும், தன் மனைவியும் தன் மகளும் தனது கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதை அறியும் ஒவ்வொரு கணமும் மிக்கேலுக்குச் செய்வதற்கு எதுவும் தெரிவதில்லை. குடித்து விட்டு விட்டுக்கு வெளியில் கிடக்கும் கயிற்றுக் கட்டிலில் கிடப்பது தான் அவனுக்குத் தெரிந்த ஒரே வழி.
காதலித்தவர்களைக் கல்யாணம் செய்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லையோ என்னும் அளவுக்கு அவர்களின் ஏற்பு மனநிலை இருக்கிரது. மிக்கேலின் மகன் செபஸ்தியானே தான் காதலித்த ரஞ்சியைக் கல்யாணம் செய்து கொள்ளாமல், கொஞ்சம் பணத்தோடு வந்தாள் என்பதற்காக இன்னொருத்தியை மணந்து பக்கத்திலுள்ள சிறுநகரத்தில் வாத்தியாக இருக்கிறான். அவனும் கூட ரஞ்சியை மறக்கவில்லை; ரஞ்சியும் அவளை மறந்து விடவில்லை. சொந்தக் கிராமத்திற்கு வரும் போது பெண்கள் என்றால் பழையநினைவுகளில் திளைக்கவும் ஆண்களென்றால் கொஞ்சம் குடித்து மறக்கவும் செய்கிறார்கள். எதற்காகவும் யாரையும் வெறுக்காத அன்புக்குச் சொந்தக்காரர்களாக இருக்கும் அந்தக் கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையில் லாஞ்சு எனும் எந்திரப் படகின் வரவின் ஏற்படுத்திய முரண் தான் அன்புக்கு முரணான பகையைக் கொண்டு வருகிறது. பாரம்பரிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளாமல், ஊர்க்கட்டுப்பாட்டை மீறிக் கிறிஸ்துமஸ் நாளன்று மீன் பிடிக்கச் செல்ல முயல்வதும், வல்லத்துக்காரர்களை மதிக்காமல் இரண்டாம் தர மனிதர்களாகப் பார்க்கும் பார்வையும், அதனால் ஏற்படும் முரண்பாடும் மனிதர்களிடம் அன்பைத் தொலைக்கச் செய்து கொலைவெறியைக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது.
மிக்கேலின் வல்லத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே தனது நோஞ்சான் மனைவி கேதரினை விரட்டி விட்டு பிலோமியை இரண்டாம் தாரமாக்க நினைத்த ஐசக், லாஞ்சிக்காரன் ரோசாரியோவைக் கொலை செய்ததும், அவன் செய்த குற்றம் நிருபிக்கப் படாத பின்னும் பைத்தியக்காரனாக அலைந்ததும் காரணம் புரியாத புதிர். கொண்டாட்ட நாளில் மகிழ்ச்சியோடு உண்டும் குடித்தும் இருந்த மரியம்மை தீடீரென்று இறந்து போனதும், அதனைத் தொடர்ந்து பிலோமி நோயுற்றுப் படுக்கையில் விழுந்ததும், மனைவியை இழந்த மிக்கேல் சொந்தக் கிராமத்தை விட்டுச் செல்லச் சம்மதித்து வல்லத்தையும், வீட்டையும் விற்கத் தயாரானதும் காரணங்களற்ற புதிர்நிகழ்வுகளாகவே நகர்கின்றன. மிக்கேலிடம் கையாளாக இருந்து வல்லம் ஓட்டக் கற்றுக் கொண்ட சிலுவையடியானே, மிக்கேலுக்கு நினைவு தப்பி விட்டது தெரிந்து முழுப் பணமும் கொடுத்து வல்லத்தை வாங்கியதாக ஏமாற்றுவான் எனப் பிலோமி நினைக்கவே இல்லை என்பதும் இன்னொரு புதிர் தான்.
முழுக் கட்டுரையையும் படிக்க:  http://ramasamywritings.blogspot.com/2012/01/blog-post_13.html
நன்றி: குமுதம் தீராநதி/ ஜனவரி 2012
Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கடல்புரத்தில், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள் குறித்து and tagged , , , , . Bookmark the permalink.

2 Responses to வெளியிலிருந்த பார்த்த ஆச்சரியம்: வண்ணநிலவனின் கடல்புரத்தில்

  1. rathnavelnatarajan சொல்கிறார்:

    நல்ல கதை.
    நன்றி ஐயா.

  2. தமிழில் எனக்கு பிடித்த நாவல்களுள் ‘கடல்புரத்தில்’க்கு என்றும் முதலிடம்தான். கட்டாயம் அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல் கடல்புரத்தில். பகிர்விற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s