காலம் 2

வண்ணநிலவன்
சப் கோர்ட்டுக்கும் செசன்ஸ் கோர்ட்டுக்கும் நடுவே ஏராளமான வேப்பமரங்கள் நின்றிருந்தன. எல்லா கோர்ட் கட்டிடங்களுமே பிரிட்டீஷார் காலத்தில் கட்டப்பட்டவைதான். செசன்ஸ் கோர்ட்டின் வடபுறம் அடுத்தடுத்து டிஸ்டிரிக்ட் கோர்ட் ஆபீசும், அமீனா ஆபீசும் இருந்தன. காப்பியிஸ்ட் ஆபீஸ் குறிச்சி போகிற ரோட்டோரத்தில் இருந்தது. ரோட்டுக்குக் கீழே தாமிரபரணி ஓடியது. காப்பியிஸ்ட் ஆபீஸ் வாசலில் இருந்து பார்த்தால் ஆறு, ஆற்றுக்குள்ளிருக்கிற மண்டபங்கள், சுலோசன முதலியார் பாலம், ஜங்ஷன் எல்லாம் தெரிந்தன.
சப் கோர்ட் வாசலில் பியூன் சுடலைமுத்து யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். உள்ளே கோர்ட் நடந்து கொண்டிருந்தால் அவன் அங்கே நிற்கமாட்டான். ஓருவேளை ஜட்ஜ் சேம்பருக்குள் போயிருப்பாரோ என்று யோசித்துக் கொண்டே அவனைப் பார்த்து நடந்தான் நெல்லையப்பன். அதற்குள் கோர்ட்டுக்குள்ளிருந்து பெரிய குமாஸ்தாவே கேஸ்கட்டுகளை மார்போடு அனைத்தபடி வெளியே வந்தார். அவனைப் பார்த்ததும் “எங்கே? சப் கோர்ட்டுக்கா?” என்று கேட்டார் சிதம்பரம் பிள்ளை. கதர்வேட்டியும் கதர் சட்டையும் அணிந்திருந்தார் சிதம்பரம் பிள்ளை.
“ஜூனியர் நவநீதகிருஷ்ணன் அய்யாகிட்டே கட்டெல்லாம் குடுத்து விட்டோமே… என்னாச்சுன்னு பாத்துட்டுப் போலாம்னுதான் வாரேன். முன்சீப் கோர்ட்லே எல்லாம் அட்ஜர்ன் இயிட்டுது. பெரிய அய்யா பாருக்குப் போயிட்டாக…” என்றான் நெல்லையப்பன்.
“இங்கியும் எல்லாம் அட்ஜர்ன்மெண்ட்தான். நவநீதகிருஷ்ணன் கலெக்டராபீசுக்குப் போயிருக்கார்”.
“மகாலிலிங்கத்தைப் பார்த்தியா?…” என்று கேட்டார்.
“மகாலிங்கமா?… நான் பார்க்கலியே?…”
“பற்பநாதபிள்ளைகிட்டே ஸ்டாம்ப் பேப்பர் வாங்கப் போனவனை ஆளையே காணலை.. சரி வா ஓரு காபி சாப்பிடலாம்…”
“இல்ல அண்ணாச்சி… இப்பந்தான் லாயர் கேண்டீன்லே நானும் ஆவுடையப்பன் அண்ணாச்சியும் டீ சாப்பிட்டோம்…” என்றான். அலமேலும் பாலகிருஷ்ணனும் உடன் சாப்பிட்டதைச் சொல்லவில்லை. பாலகிருஷ்ணனை அண்ணாச்சிக்குப் பிடிக்காது. நெல்லையப்பனைக் கெடுக்கிறவர்கள் இரண்டுபேர். ஓருத்தர் சபாபதி, இன்னொருத்தர் பாலகிருஷ்ணன் என்பது அவர் அபிப்பிராயம்.
“சரி… சும்மா வாயேம்டே…” என்று கூப்பிட்டார்.
“இல்ல அண்ணாச்சி இ.பி. முப்பத்தாறிலே படிகட்டணும்லா…. அதைக் கட்டிட்டு வந்திருதேன்…”
“ஸ்டாம்பெல்லாம் ஓட்டிட்டீயா?…”
“காலையில ஆபீஸ்லே வைத்தே ரெடி பண்ணிட்டேன்…”
“சரி.. அப்பம் போ… இன்னைக்கு மொத நாளுல்லா… கேசுஓண்ணும் நடக்காது. நீ வேணும்னா வீட்டுக்குப் போயிட்டுச் சாயந்திரமா ஆபீசுக்கு வந்துரு… டைரி பாக்கி றதெல்லாம் நான் பாத்துக்கிடுதேன்…”
நெல்லையப்பனுக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. சிதம்பரம் பிள்ளைக்கு அவன் மேல் கரிசனை உண்டுதான். ஆனால் அதை ரொம்பவும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளமாட்டார். ரொம்பப் பரிவு காட்டினால் உருப்படாமல் போய்விடுவான் என்று நினைத்தார். காபி சாப்பிடக் கூப்பிட்டது மாதிரி எப்போதாவது அவரையும் மீறிக் கசிந்து விடுகிற சந்தர்ப்பங்களும் உண்டு. சிதம்பரம் பிள்ளை போய்விட்டார். நெல்லையப்பன் அமீனா ஆபீஸைப் பார்க்க நடந்தான்.
அமீனா ஆபீஸில் ஆசீர்வாதத்தையும் மாணிக்கத்தையும் தவிர யாருமே இல்லை. படியைக் கட்டிவிட்டு கட்டுகளை எடுத்துக் கொண்டு செசன்ஸ் கோர்ட் சிரஸ்தார் ரூம் பக்கம் போனான். அங்கே மகாலிங்கம் உட்கார்ந்திருந்தான். அவனை பெரிய குமாஸ்தா பிள்ளை தேடினார் என்பதைச் சைகையால் சொன்னான். மகாலிங்கம் புரிந்தது மாதிரி தலையை ஆட்டினான். டைரியையும் கேஸ் கட்டுகளையும் வைத்துவிட்டுப் புறப்பட்டான்.
“எங்கே சாப்பிடவா?…” என்று மகாலிங்கம் கேட்டான்.
“இல்லே… வீட்டுக்குப் போறேன். பெரிய குமாஸ்தாப் பிள்ளை சாயந்திரம் ஆபீசுக்கு வந்தாப் போதும்னு செல்லிட்டாரு… அதான் வீட்டுக்குப் போறேன். சாயந்திரம் பாக்கலாம்…” என்றான். மகாலிங்கம் தலையை அசைத்தான். பிறகு மெல்ல அவனருகே வந்து “ஓரு ரெண்டு ரூவா இருந்தாக் குடுங்களேன்…” என்று கேட்டான். சட்டைப் பையில் சில்லரையும் நோட்டுக்களுமாக இருந்தன. முன்சீப் கோர்ட்டில் வைத்து ஓரு கட்சிக்காரர் அவனிடம் பத்து ரூபாய் கொடுத்திருந்தார். ஆபீஸ் பணமும் இருந்தது.
“தெரியும்… நீ ஒருமாதிரி முழிக்கும் போதே தெரியும் எப்படியும் ரூவா கேப்பேன்னு..” என்று சொல்லிக் கொண்டே இரண்டு ரூபாயை எடுத்துக் கொடுத்தான். மகாலிங்கம் சிரித்துக்கொண்டே வாங்கிக் கொண்டான்.
“பெரிய குமாஸ்தாப் பிள்ளைகிட்டே சொல்லிலிரு. ஆபீஸ் ரூபாலே இருந்துதான் குடுத்தேன்” என்றான். வக்கீலய்யா அன்றைக்குச் சாயந்திரம் மெட்ராஸ் போகப்போகிறார், அவரைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போகலாமென்று தோன்றியது. கார்ஷெட்டில் காரைத் தேடினான். கார் இல்லை. அப்படியானால் போய் விட்டாரா? சமயங்களில் டிரைவர் எங்காவது வெளியே எடுத்துச் சென்றாலும் சென்றிருப்பான். எதற்கும் பார் அஸோஷியேஷனுக்குள் போய்ப் பார்ப்போம் என்று நினைத்தான். சிரஸ்தார் வெற்றிலை எச்சிலைத் துப்புவதற்காக வராந்தாவுக்கு வந்தார். அவனைப் பார்த்ததும் ஊதடுகளில் லேசான குறுநகை ஓடியது. விஷ் பண்ணினான். அவரும் பதிலுக்கு விஷ் செய்தார்.
பார் அஸேஷியேஷனையும், வக்கீல் குமாஸ்தாக்கள் சங்கத்தையும் பக்கத்தில் நெருங்கும்போதே உள்ளேயிருந்து, சத்தம் கேட்கும். தெளிவில்லாத பேச்சுக்குரல்கள் சளசளக்கும். பாருக்குள் நுழைந்தான். வழக்கமாக சீனியர் உட்காருகிற இடத்தில் தேடினான். அவர் இல்லை. வீட்டுக்குத்தான் போயிருக்க வேண்டும் என்பது ஊர்ஜிதமாயிற்று. மூன்ரைமணிக்கு மெட்ராஸ் வண்டி. அப்போதே போனால்தான் புறப்படச் செüகரியமாக இருக்கும். ஜூனியர்கள் நவநீத கிருஷ்ணனும் சேஷாத்திரியும் அருகருகே உட்கார்ந்து எதோ மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். சரி, சங்கத்துக்குப் போய் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்புவோம் என்று நினைத்துத் திரும்பியபோது யாரோ நெல்லையப்பா.. நெல்லையப்பா… என்று கூப்பிடுகிற சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தான். நவநீத கிருஷ்ணன்தான் கையை நீட்டிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அதற்குள் அவர் கலெக்டர் ஆபீஸிலிருந்து திரும்பியிருந்தது நெல்லையப்பனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
நடுஹாலில் நீளமான மேஜையைச் சுற்றி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. சுவர் அலமாரிகளில் சட்டப் புஸ்தகங்கள். எல்லாம் பிரிட்டீஷார் காலத்து மேஜை, நாற்காலிகள், அலமாரிகள். அஸோஷியேஷன் கிளார்க் நாயுடு ஒரு மூலையில் மேஜையின் முன்னால் உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றி பைண்டு வால்யூம்கள். நவநீதகிருஷ்ணன் பக்கத்தில் போய் நின்றான்.
“என்ன நெல்லையப்பா சப்கோர்ட்டில் ஓ எஸ். நூத்திப்பதினாலு இன்னைக்கு ஸ்டேட்மெண்டுக்குப் போட்டுருந்தது போலிருக்கே. நீங்க யாரும் கெட்டே எடுத்து வைக்கலை. நல்லவேளை சீனியர் பேரைச் சொல்லி கிளார்க் கூப்பிட்டார். பெறவு நான்தான் எழுந்திரிச்சி “ஸம் மோர் டைம்’ ன்னு கேட்டேன். கொஞ்சம் வாய்தாவெல்லாம் பாத்து கட்டுகளை எடுத்து வைக்கக் கூடாதப்பா?… நான் இல்லைன்னா என்ன ஆயிருக்கும்?…”
ஓ எஸ். நூத்திப்பதினாலா?”
“ஆமா… காருகுறிச்சிக்காரர் கேஸ்..”
“அடாடா…. எப்பிடியோ மறந்திட்டுது சார்!”
“ஜட்ஜ் கூப்பிட்டுப் பார்த்துட்டு ரெப்ரஸண்ட் பண்ண ஆள் இல்லைன்னு டிஸ்மிஸ் பண்ணியிருந்தா என்ன ஆயிருக்கும்? அப்புறம் ரெஸ்டோவர் பெட்டிஷன் போட்டு அது இதுன்னு அலையணும்…”
“மன்னிச்சுக்கிடுங்கசார்… எப்பிடியோ விட்டுப் போயிட்டுது…”
“அதைச் சொல்துக்குத்தான் கூப்பிட்டேன். சீனியர் வீட்டுக்குப் போயிட்டாங்க. சாயந்திரம் வண்டியில்லா?… நானும் சேஷாத்திரியும் இங்கேதான் இருக்கோம். எதும் வேணும்னா வாங்க…”
“நீங்க கூட வீட்டுக்குப் போகணும்னா போகலாம் சார்.. எல்லா கோர்ட்லேயும் வாய்தாதான்”
“அப்பிடியா? சரி..”
சேஷாத்திரி எதோ புஸ்தகத்தினுள் மூழ்கியிருந்தார். நெல்லையப்பன் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். வாய்தா கட்டுகளை எல்லாம் சரிபார்த்து எடுத்து வைத்தது அவன்தான். எப்படியோ ஓஎஸ் நூத்திப்பதினாலு வாய்தா தவறிப்போய்விட்டது. அண்ணாச்சி டைரி எழுதியிருந்தால் தவறிப்போகாது. அவன்தான் டைரி எழுதியிருக்க வேண்டும். அதனால்தான் என்ட்ரி விட்டுப் போய்விட்டது. குற்ற உணர்ச்சியால் உடம்பெல்லாம் நடுங்கியது. அண்ணாச்சிக்குத் தெரிந்தால் ரொம்பக் கோபப்படுவார். எவ்வளவு கவனமாக இருந்தாலும் தவறு நடந்துவிடுகிது. இதைவிட நல்லவேலைக்குப் போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருப்பதால் இந்த வேலையில் கவனம் குறைந்து விடுகிதோ? நல்லவேலை தேட முயற்சிப்பது தப்பா?
பெரிய குமாஸ்தாப்பிள்ளை அண்ணாச்சி வீட்டுக்குப் போகலாம் என்று சொன்னதும் ஏற்பட்ட சந்தோஷமெல்லாம் நவநீதகிருஷ்ணன் சொன்னதைக் கேட்டபிறகு வடிந்துபோய் விட்டது. மத்தியானம் மேட்னிக்கு ஆராதனா பார்க்கப் போகவேண்டும், அல்லது காந்தி அக்காவுடன் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்திருந்தான். இல்லையென்றால் சபாபதி அண்ணன் கடையில் போய் உட்கார்ந்து அவர்களுடன் பொழுதைப் போக்கலாம். அவர்கள் போர்டு எழுதுகிதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இப்போது மனம் சோம்பி வாடிவிட்டது. தான் எந்த வேலைக்குமே லாயக்கில்லாமல் போய்விடுவோமோ என்று பயமாக இருந்தது. ஆனால் பாரில் நவநீதகிருஷ்ணன் அவர்பாட்டுக்கு சேஷாத்திரியுடன் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தார். சப் கோர்ட் விஷயத்தை எப்போதோ மறந்துவிட்டார். நெல்லையப்பன் இவ்வளவு வருத்தப்படுவான் என்பது தெரிந்திருந்தால் அவனிடம் அதைச் சொல்லியே இருக்கமாட்டார்.
பாருக்கும் மணி ஐயர் கேண்டீனுக்கும் இடையே சதுர வடிவிலான பெரிய கூடம் ஓன்றிருந்தது. கூடத்துக் கைப்பிடிச் சுவர்களில் ஆட்கள் ஊட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நடுவில் பற்பநாதபிள்ளை சாய்மான மேஜை முன்னால் உட்கார்ந்து ஸ்டாம்ப் பேப்பர் விற்றுக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் பெரிய காக்கிப் பை மடித்து வைக்கப்பட்டிருந்தது. பற்பனாதபிள்ளைக்குப் பின்னால் கைலாசபுரம் மூர்த்தி வேகமாக எதையோ டைப் செய்து கொண்டிருந்தான். அவன் கால்மாட்டில் மூன்று பேர் அடக்கமாக உட்கார்ந்திருந்தனர். முன்சீப் பக்கமிருந்து வக்கீல்களும் கட்சிக்காரர்களும் வந்துகொண்டிருந்தனர்.
கேண்டீனுக்குள் மணி ஐயர், “கொளத்து ஓரு முறுகல் ரவா போடு” என்று சொல்லிக் கொண்டிருந்தார். நெல்லையப்பன் சைக்கிளை எடுப்பதற்காக சங்கத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
தொடரும்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், காலம், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள் and tagged , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s