மிருகம்

வண்ணநிலவன்
நார்ப் பெட்டியில் கொஞ்சம் சுள்ளி விறகுகளைத் தவிர வேறே ஒன்றுமில்லை. ஆனாலும் கூட பெட்டி கனமாக இருந்தது. பெட்டியை இறக்கிக் கீழே வைத்துவிட்டு, ஓரமாக நின்றிருந்த குத்துக்கல்லின் மேல் உட்கார்ந்தார் சிவனு நாடார். அவர் உடம்பிலிருந்து அடித்த நாற்றம் அவருக்கே குமட்டியது. பீடி குடித்தே ஏழெட்டு நாளாகி விட்டது. இன்னமும் பீடி வாடை முகத்துக்குள் வீசியது
வரிசையாக எல்லா வீட்டுப் புறவாசல்களும் சத்தமே இல்லாமல் கிடந்தன. நாலைந்து வீடுகள்   தள்ளி ஒரே ஒரு காக்கை மட்டும் ஒரு மண்சுவர் மீது உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. நேற்று காலையில் வண்டி மலைச்சி அம்மன் கோவில் பக்கம் போகும்போது ஒரு காக்கை தலைக்கு மேலே பறந்து போயிற்று. அதுக்கு முன்னால் காக்கையைப் பார்த்து இரண்டு மூன்று நாட்கள் இருக்கும். மண் சுவரில் உட்கார்ந்திருக்கிறது அதே காக்கை தானோ என்று நினைத்துக் கொண்டே எதிர்த்த வீட்டைப் பார்க்கத் திரும்பினார்.
ஒரு வெள்ளை நாய் அந்த வீட்டுப் புறவாசல் கதவு இடைவெளிக்குள் முகத்தைச் சொருகித் திறக்கப் பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்தது. கதவு கொஞ்சங்கொஞ்சம் திறந்து திரும்பவும் மூடிக்கொண்டது. சிவனு நாடாருக்கு சந்தோஷமும் ஆச்சரியமும் தாங்க முடியவில்லை. வேகமாக எழுந்து வீட்டைப் பார்க்க நடந்தார். இவர் வருகிற சத்தம் கேட்டு நாய் இவரைப் பார்த்துவிட்டு திரும்பவும் கதவைத் திறக்கப் பிரயாசைப்பட்டது. குனிந்து கல்லைத் தேடினார். எங்கேயுமே கல்லைக் காணவில்லை. மழையில் கரைந்து போய் நின்றிருந்த மண் சுவரிலிருந்து துண்டுச் செங்கல், ஓட்டாஞ்சல்லி, ஜல்லிக் கற்களைப் பெயர்த்து எடுத்து நாயைப் பார்த்து எறிந்தார். நாய் தூர ஓடிப்போய் நின்றுகொண்டது. அது பக்கத்தில் வருவதற்குள் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு வீட்டுக்குள்ளே நுழைந்துவிட்டார். கதவைச் சாத்தினதும் நாய் ஓடிவந்து கதவுக்குப் பக்கத்தில் வந்து நின்றது கேட்டது. வீட்டுக்குள்ளே நுழைந்ததும் அவருக்கு ரொம்பவும் திருப்தியாக இருந்தது.
அந்த வீட்டுக்கு இதுக்கு முன்னால் எத்தனையோ தடவை வந்திருக்கிறார். அந்த வீட்டில் நடந்த கல்யாணத்துக்கெல்லாம் இவரே வேலை செய்திருக்கிறார். இரண்டே கட்டுள்ள வீடு அது. அந்த அடுப்படிக்கு அப்புறம் ஒரு பட்டக சாலை இருந்தது. பட்டக சாலைக்கு வெளியே அழி பாய்ச்சின ஒரு திண்ணை மட்டுமே உண்டு.
அடுப்படிக்குள் தெரிய அவருக்குக் கொஞ்சம் நேரமாயிற்று. இருட்டோடு அடுப்புச் சாம்பல் கலந்த வாடை வீசியது. கொஞ்ச நேரம் கழித்து பார்வை தெரிய ஆரம்பித்தது. அடுப்புக்கு மேலே இருந்த ஜன்னல் கதவுகளைத் திறந்து விட்டார். அடுப்பில் அள்ளாமல் போட்டிருந்த சாம்பலையும், புடை மேல் இருந்த சின்னதான சட்டியையும் தவிர வேறே அந்த அடுப்படியில் ஒன்றுமே இல்லை.
பட்டகசாலைக் கதவு சாத்தாமலே திறந்து கிடந்தது. கதவுக்குப் பின்னால் நின்றிருந்த நெல்குதிரின் வாய்க்குக் கீழே அதை அடைத்துச் சொருகியிருந்த துணி விழுந்து கிடந்தது. குனிந்து குதிருக்குள் பார்த்தார். லேசாகப் படிந்திருந்த புழுதிக்கு மேல் சில நெல்மணிகள் கிடந்தன. குதிருக்குப் பக்கத்தில் பூட்டிக்கிடந்த பெரிய மரப்பெட்டியைக் கஷ்டப்பட்டு அசைத்துப் பார்த்தார். சில பாத்திரங்கள் உருண்டன. முன் வாசல் நிலைக்கு மேலே ஒரே ஒரு போட்டோ படம் மட்டும் நூலாம்படையுடன் தொங்கிக்கொண்டிருந்தது. அந்தப் போட்டோவிலிருந்த ஒவ்வொரு ஆளாகக் கவனித்துப் பார்த்தார். எல்லோரும் அவருக்கு ரொம்பவும் தெரிந்தவர்கள். அதற்கப்புறம் அந்த அறையில் நிற்கவே அவருக்குச் சங்கடமாக இருந்தது.
வெளியே போகப் புறப்பட்ட போது நெல் குதிர் இருந்த எதிர்த்த பக்கத்துக் கதவுக்குப் பின்னால் ஒரு பழைய ஓவல் டின் டப்பா உட்கார்ந்திருந்தது. ஆசையோடு அதைப் பார்க்க நடந்தார். அருகே போனதும் அதிலிருந்து எறும்புகள் போய்க் கொண்டிருந்ததைப் பார்த்து சந்தோஷமாக இருந்தது. டப்பாவைத் தூக்கி மூடியைத் திறந்து பார்த்தார். அடியில் கொஞ்சம் கருப்புக்கட்டித் தூள் கிடந்தது. அந்தத் தூளை வைத்து இரண்டு வேளை காப்பி போடலாம். டப்பாவைத் தரையில் வைத்து கதவுக்கு முன்னால் உட்கார்ந்து தட்டினார். எறும்புகள் சிதறி ஓடின. அடுப்படிக் கதவு அவ்வப்போது கொஞ்சம் திறந்து மூடுவதும், திறந்த சமயங்களில் நாயின் கறுப்பு மூக்கு மட்டுமாகத் தெரிந்தது.
தொடந்து வாசிக்க: மிருகம்
 
எஸ் ஐ சுல்தான்

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணநிலவன், வண்ணநிலவன் கதைகள், வண்ணநிலவன் கதைகள் குறித்து and tagged , , , , , . Bookmark the permalink.

One Response to மிருகம்

  1. வறட்சியின் கொடுமையை கண்முன் விவரிக்கிறது இந்தச் சிறுகதை. மேலும், மனிதனுக்குள் உள்ள மிருகத்தையும் இக்கதை அடையாளம் காட்டுகிறது. பகிர்விற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s